Saturday 17 December 2011

இணையத்தில் எத்தனை வகை மோசடிகள்

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே' என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ளாவிடில் பொருள், பெயர் எல்லாமே நட்டம்தான்.
இரண்டொரு வருடங்களுக்கு முன்பு, என் நண்பர் பணிபுரியும் வங்கிக்கு அவரைச் சந்திக்கச் சென்றிருக்கையில் அங்கு எனக்குத் தெரிந்த ஒரு வாடிக்கையாளரும் வந்திருந்தார். அவர் நிரம்பப் படித்து, நல்ல வேலையில் இருப்பவர். பிறருக்கு உதவி செய்யும் மனமுடையவர். அவர் இலவசமாக ஒரு படிப்பகமும் நடத்தி வந்தார். அவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைக் காட்டினார். அதன் சாராம்சம் இதுதான்.
'என் கணவர் திரண்ட சொத்துக்களை வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனக்குக் குணமாக்கவே முடியாத ஒரு நோய். எங்களுக்கு வாரிசுகளும் இல்லை. எனவே தகுதியான ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவரை, எங்கள் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைப் பொது நன்மைக்காகப் பயன் படுத்த அறங்காவலராக நியமிக்க நினைத்துப் பலரிடம் விசாரித்ததில் உங்களைப்பற்றித் தெரிய வந்தது. இத்தகைய சேவை மனப்பான்மை உள்ள நீங்கள், எங்கள் சொத்துக்களை ஏற்றுக்கொண்டால், நான் நிம்மதியாக இறப்பேன். இது குறித்து மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்'

இதைப்படித்தவுடன் புல்லரித்துப்போய்விட்டார் எங்கள் நண்பர். தனது சேவையும் நல்லகுணமும் வெளிநாடுகளில் எல்லாம்(!?!) பரவியிருக்கிறது என்று நினைத்துப் பூரித்துப்போன அவர் உடனடியாக அந்தத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் அவரிடம் நன்கு இனிமையாகப் பேசி, பணத்தை இந்தியாவிற்கு, அமெரிக்காவில் இருந்து மாற்றவேண்டுமானால், அதற்கான சட்ட ரீதியான பத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அதற்கு அவர் ஏறத்தாழ இருபதாயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அவருக்கு இந்த பரிவர்த்தனை தொடர்பான ஐயம் ஏற்படலாம் என்பதால், அவர்களது வழக்கறிஞரும், சொத்துக்களை நிர்வகிப்பவருமான் 'திருவாளர் X' க்குப் பணத்தை அனுப்பினால் போதும் என்றும் கூறி 'திருவாளர் X' இன் விவரங்கள், தகுதிச் சான்றிதழ்கள் முதலியவற்றை மின்னஞ்சலில் அனுப்புவதாகவும், அதை ஒரு குறிப்பிட்ட 'சட்ட வல்லுனர்களுக்கான' இணைத்தளத்தில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.

அந்த இருபதாயிரம் டாலர் என்பது இந்திய மதிப்பின்படி ஏறத்தாழ தொண்ணூறாயிரம் ரூபாய் என்பதால், எங்கள் நண்பர் வங்கியை நாடி வந்தார். நாங்கள் இப்படிப் பல மின்னஞ்சல்கள் எங்களில் பலருக்கும் வந்துள்ளன, இவை எல்லாம் மோசடிகள், இவற்றை நம்பவேண்டாம் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை. அந்த வங்கியில் கடன் கொடுக்க மறுத்தவுடன் அவர் வெளியில் எங்கேயோ கடன் வாங்கிப் பணத்தை அனுப்பிப் பின் ஏமாந்ததாகக் கேள்விப்பட்டோம்.

இந்தக் கதை எதற்கென்றால்,நிரம்பப் படித்த, வெளியுலகம் தெரிந்த ஒரு நபரே, பலரது அறிவுரையையும் கேட்காமல் இப்படி மோசடி வலையில் விழும்பொழுது அனுபவமில்லாதவர்கள் கதி என்ன?

இணைத்தள மோசடி- சில விவரங்கள்

இணைய மோசடி என்பது 'இணையத்தின் வாயிலாக', அதாவது அரட்டை அறைகள், மின்னஞ்சல்கள், வலைத்தளங்கள் இவற்றின் மூலமாக போலியான, பொய்யான மோசடியான தகவல்களைப்பரப்புதல், கவர்ச்சியினைப் பயன்படுத்திப் பணம் பறித்தல், போலியான விற்பனைகள், பரிவர்த்தனைகள் என்று பலப்பலவாகும்.

பல திசைகளில் இருந்தும் நம்மைத் தாக்கும் இவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? முதலில் இந்த மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. எனவே இங்கு இணைத்தளத்தில் நடக்கும் பலவித மோசடிகள் குறித்தும் நாம் விரிவாக அலசப் போகிறோம்.

மோசடிகளின் வகைகள்:

மோசடிகள் பலவிதம். அவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1.அடையாள மோசடிகள் (Identity Frauds)
2. மருந்துகள் தொடர்பான மோசடிகள் (Pharmacy Frauds)
3. நிதி தொடர்பான மோசடிகள் (Financial Frauds)
4. ஏல மோசடிகள் (Auction Frauds)
5. குலுக்கல் முறை, சூதாட்டங்கள் தொடர்பான மோசடிகள் (Lottery & Sweepstakes)

அடையாள மோசடிகள் (Identity Frauds):
நமது அந்தரங்கத் தகவல்களைத் திருடிப்பயன்படுத்துதல், பெரு நிறுவனங்கள் வங்கிகள் பெயரில் மின்னஞ்சல் அனுப்பி, நமது வங்கிக்கணக்கு எண், கடவுச்சொல் முதலியவற்றைக் கேட்டறிதல், பலவித மென்பொருட்களை நமது கணிணியில் ஊடுருவச் செய்து நமது செயல்பாடுகளைக் கண்காணித்தல், நம் வேலைகளை முடக்குதல், அனுமதியற்ற, வரையறையற்ற மின்னஞ்சல்களை அனுப்பி விளம்பரம் செய்தல், இவை அடையாள மோசடிகள் எனப்படும். அவை செயல்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து அவற்றை கீழே உள்ள பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அ. வெட்டுதல் (Hacking)
ஆ. அடையாளத்திருட்டு(Identity Theft)
இ. பொய் அடையாளத்துடன் தூண்டிலிடுதல் (Phising)
ஈ. ஏமாற்று, வஞ்சகம் (Spoofing)
உ. வரைமுறையற்ற மின்னஞ்சல்கள் (spam)
ஊ. உளவு நிரல்கள் (Spyware)

மருந்துகள் தொடர்பான மோசடிகள் (Pharmacy Frauds)

இணைத்தளத்தின் மூலமாக மருந்துப்பொருட்கள் வாங்குவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது இன்று சகஜமாகியுள்ளது. ஆனால், முறையான மருந்துச்சீட்டின்றி இணையத்தில் மருந்துகள் வாங்குவதும் விற்பதும் சட்டவிரோதமாகும். ஆனால், மக்கள் விளம்பரங்களை நம்பி, மருந்துகள் அனுப்பும்படி விண்ணப்பிப்பதன் காரணமாக பொருள் இழப்பைச் சந்திப்பதோடு, தங்கள் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்துக்கொள்கின்றனர்.

நிதி தொடர்பான மோசடிகள்:
ஒரு தனிநபர் மீதோ, ஒரு நிறுவனத்தின் மீதோ குறிவைத்து நடத்தப்படும் இந்த அமைதியான தாக்குதல்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏராளமான பண நட்டத்தை உண்டாக்கவல்லது.
எல்லை தாண்டிய மோசடி எனப்படும் க்ராஸ் பார்டர் மோசடி, வேலை வாய்ப்பு மோசடிகள், முதலீடு தொடர்பான மோசடிகள், நைஜீரியன் மோசடிகள், தான தருமம் கேட்டு வரும் மோசடிகள், முன்பதிவுக்கட்டண மோசடிகள் என்று எண்ணற்றவை இதன் கீழ் அடங்குகின்றன.

ஏல மோசடிகள்:
இணையத்தில் நடக்கும் ஏலங்களில் கலந்துகொண்டு, மிக மலிவாகக் கிடைக்கிறதே என்று பொருட்களை வாங்கி (கடன் அட்டை மூலம் அல்லது பேபால் மூலம் பணத்தையும் கட்டிவிட்டு) பின் பொருட்கள் வந்தே சேராமல் அல்லது தரமற்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு ஏமாறுபவர்கள் ஏராளம் ஏராளம்.

குலுக்கல் மற்றும் சூதாட்ட மோசடிகள்:
நீங்கள் இந்த விளையாட்டில் வெற்றிபெற்றால் இவ்வளவு பரிசு என்று அறிவித்துவிட்டு, நீங்கள் வென்றதும், உங்கள் பரிசினைப்பெற இவ்வளவு கட்டவேண்டும் என்பது, நீங்கள் குலுக்கல் முறையில் இவ்வளவு பரிசு பெற்றுவிட்டீர்கள், அதை முறைப்படி பெற நீங்கள் இவ்வளவு வரி செலுத்தவேண்டும், இவ்வளவு கட்டணம் கட்டவேண்டும் என்பது, இவையெல்லாம், மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் முறை. பணம் நிறையக்கிடைக்கிறது என்றதும் பேராசைப்பட்டு இதில் இறங்குபவர்கள் 'பேராசை பெருநட்டம்' என்ற பாடத்தை விரைவிலேயே கற்றுக்கொள்ளலாம்.

                                   நன்றி
                            muththumani

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment